×

நிலவின் தென் துருவத்தில் உள்ள ரோவர் எடுத்த லேண்டரின் 3டி படம் வெளியீடு

சென்னை: நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரோவர் எடுத்த லேண்டரின் 3டி படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 23ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் திட்டமிட்டபடி தரையிறங்கியது. இதையடுத்து லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவரும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்தது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவில் பல்வேறு ஆய்வுகளை செய்து வந்தன. இந்நிலையில் தான் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாற்றம் மற்றும் அதிர்வுகள் பற்றி ஆய்வு செய்து முக்கிய தகவல்களை அனுப்பியது. அதேபோல் பிரக்யான் ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி நிலவின் தென்துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்தது. மேலும் அலுமினியம், கால்சியம், இரும்பு தாது, குரோமியம், டைட்டானியம், மெக்னீசியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதையும் கண்டுபிடித்தது. இது விஞ்ஞானிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே நிலவில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் ஆயுட்காலம் 14 நாட்கள். அதாவது லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றில் இருக்கும் சோலார் பேனல்கள் சூரியஒளியை பயன்படுத்தி ஆய்வுக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைத்து கொள்ளும். அதன்படி, நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் 14 நாட்கள் மட்டுமே சூரியஒளி கிடைக்கும். அதன்பிறகு அடுத்த 14 நாட்கள் சூரியஒளி கிடைக்காது. அதன்படி சூரிய ஒளி கிடைக்காத பட்சத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை நிலவில் ஓய்வு நிலையில் இருக்கும். அதாவது, கருவிகள் செயலிழக்க செய்யப்பட்டு நிலவிலேயே வைக்கப்படும். அதனை தொடர்ந்து ஓய்வு நிலையில் உள்ள லேண்டர் மீண்டும் பணிகளை தொடங்க ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகருமா என்று நேற்று முன் தினம் இஸ்ரோ சந்தேகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள நவ்கேம் என்ற கேமரா மூலம் நிலவில் உள்ள லேண்டரின் முப்பரிமாண (3D) படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு:
அனாக்லிஃப் என்பது ஒரு பொருளையோ நிலபரப்பையோ ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களிலிருந்து முப்பரிமாண (3D) வடிவில் எளிமையாக காட்சிப்படுத்துவது. பிரக்யான் ரோவரில் உள்ள நவ் கேம் ஸ்டீரியோ இமேஜஸைப் பயன்படுத்தி அனாக்லிஃப் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரோவரில் உள்ள நவ் கேம் வலது, இடதுபுற காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படம். இந்த முப்பரிமாண புகைப்படத்தில் இடதுபுற படம் சிவப்பாகவும், அதே நேரத்தில் வலதுபுற படம் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தெரிகிறது.

இந்த இரண்டு படங்களுக்கிடையேயான கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடு ஸ்டீரியோ விளைவை ஏற்படுத்துகிறது. இதுதான், மூன்று பரிமாணங்களின் காட்சி தோற்றத்தை அளிக்கிறது. 3Dயில் பார்க்க விரும்பினால், சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நவ் கேம் (NavCam) எனப்படும் நேவிகேஷன் கேமரா பெங்களூருவில் உள்ள மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகம் (LEOS) மூலம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நிலவின் தென் துருவத்தில் உள்ள ரோவர் எடுத்த லேண்டரின் 3டி படம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,ISRO ,
× RELATED பிஎஸ்எல்வி ராக்கெட்டை...